விளாத்திகுளம் அருகே தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மரியாதை!



ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூர் கிராமத்தை சேர்ந்த வேதநாயகம் ஞானசௌந்தரிஅம்பாள் தம்பதியரின் மகனான இம்மானுவேல் சேகரனார்,1924-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி பிறந்தார்.



தியாகி இமானுவேல் சேகரனாரின் இயற்பெயர் இம்மானுவேல் தேவேந்திரர் என்பதாகும், தியாகி இமானுவேல் சேகரனார் 1924-ம் ஆண்டு அக்டோபர் 9 முதல் 1957 செப்டம்பர் 11 வரை தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் சமூக நீதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் போராடிய ஒரு முதன்மையான தியாகி சமூக போராளி மற்றும் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.


இராணுவச் சேவை: இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய அவர், பின்னர் சில காலம் இந்திய இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் பணியாற்றினார். அவருக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தன. 


சமூகப் போராட்டங்கள்


சுயமரியாதை மீட்பு: இராணுவப்பணியை முடித்துத் திரும்பியதும், தென்மாவட்டங்களில் நிலவிய சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சுயமரியாதையுடனும், சமஉரிமையுடனும் வாழப்போராடினார். 


இரட்டைத் குவளை முறை ஒழிப்பு: தேநீர்க் கடைகளில் இருந்த இரட்டைத் குவளை முறை, பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கத் தடை போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார். 


ஆடைச்சுதந்திரம்: ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேல் துண்டு அணியக் கூடாது, காலணி அணியக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, மக்கள் நாகரிகமாக ஆடை அணியவும், கல்வி கற்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மறைவு


தென் தமிழ்நாட்டில் நிலவிய சமூகப் பதற்றங்களைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் 1957 செப்டம்பர் 10 அன்று முதுகுளத்தூரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இம்மானுவேல் சேகரன் கலந்துகொண்டார்.

அந்தப் பேச்சுவார்த்தை முடிந்து திரும்பிய மறுநாளான 1957 செப்டம்பர் 11 அன்று இரவு, பரமக்குடியில் வைத்து அவர் சில சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்



தென்தமிழ்நாட்டில் நிலவிய கடுமையான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அடையாளத்தை மீட்டெடுக்கபாடுபட்டார்.


அதேபோல் தனது 18-வது வயதிலேயே ஆங்கிலேய அரசுக்கு எதிரான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (1942) ஆண்டு தீவிரமாக பங்கேற்று மூன்று மாதங்கள் சிறை தண்டனை பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.



தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகாரனாரின் திருஉருவப்படத்திற்கு, தமிழக வெற்றி கழக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் CCC கண்ணன் தலைமையில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்தும், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி முனியசாமி தொண்டர்கள் கிராமபொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.