விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற "சந்தனக்கூடு திருவிழா" கொடியேற்றம்!
160 அடி உயரக் கொடிகம்பத்தில் கடந்த 40 வருடமாக கொடியேற்றும் 69 வயது முதியவர்!
பக்தர்களுக்கு விபூதி வழங்கும் விஷேசமான ஒரே தர்ஹா எனும் தனிப்பெருமை - மதபேதமின்றி குவியும் பொதுமக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த "மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹா மற்றும் பள்ளிவாசலில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் "சந்தனக்கூடு திருவிழாவானது" மதவேறுபாடின்றி அனைத்து தரப்பு மதத்தினராலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் முன்னிலையில் இந்தாண்டிற்கான "சந்தனக்கூடு" திருவிழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு (14-08-2026) மாலை 5 மணி அளவில் தர்காவில் இருந்து புறப்பட்ட இஸ்லாமியர்கள் பட்டாசுகள் வெடித்து, ராஜமேளத்துடன், வெண்கொடி ஏந்தி வைப்பார் கிராமம் முழுவதும் தீன்கொடி தொடர் நகர்வலம் சென்றனர்.
பின்னர் தர்காவை வந்தடைந்த வெண்கொடியை கொடிமரத்தில் ஏற்றப்பட்டு வெகு விமர்சையாக "சந்தனக்கூடு கொடியேற்றம் நிகழ்ச்சி" சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து மத வேறுபாடின்றி தர்காவிற்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவிற்கும் கடந்த 40 வருடமாக 69 வயது முதியவர் முகைதீன் பிச்சை என்பவர் 160 அடி உயர கொடிக்கம்பத்தில் ஏறி கொடியேற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் தமிழகத்திலேயே இந்த ஒரே ஒரு தர்ஹாவில் மட்டும் தான், இந்துக் கோவில்களில் வழங்கப்படுவதைப்போல விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது என்பது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.
மேலும் வருகின்ற 27-08-2026 வியாழக்கிழமைக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் சந்தனகூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து திருவிழாவின் இறுதியாக வருகின்ற 02-09-2026 புதன்கிழமையன்று கொடியிறக்கம் நிகழ்வுடன் சந்தனக்கூடு திருவிழா முடிவடைகிறது.