ரஷ்யாவில் ஓட்டுநர் வேலை  வாங்கி தருவதாக  ஆசை காட்டி  விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த மூன்று பேரிடம்  ரூ.7.50 லட்சம் மோசடி!



டிக்கெட் வந்துவிட்டது என்று கூறி மும்பைக்கு அனுப்பி 2 மாதம் காத்திருக்க வைத்த கொடூரம் – அலுவலகத்தை காலி செய்து தலைமறைவு... மதுரையில் பதுங்கியிருந்த “வேலைவாய்ப்பு” மோசடி நபரை கைது செய்த போலீசார்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், ரங்கராஜ், மாதவராஜ் ஆகிய மூவரும் ஓட்டுநர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருச்சியில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த சுமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.ரஷ்யாவில் ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாக சுமேஷ் கூறியதை நம்பிய மூவரும், தலா ரூ.2.50 லட்சம் என மொத்தம் ரூ.7.50 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.


இதில் மாரியப்பனிடம் மட்டும், “டிக்கெட் வந்துவிட்டது... மும்பைக்கு செல்லுங்கள்” என சுமேஷ் கூறியுள்ளார். இதனை நம்பி மாரியப்பன் மும்பை சென்று தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் வேலைக்கான எந்த தகவலும் வரவில்லை.


சுமேஷிடம் தொடர்ந்து கேட்டபோது, “இப்போது வந்துவிடும்... அப்போது வந்துவிடும்” என காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றதால் சந்தேகமடைந்த மாரியப்பன், தனது மாமா மாதவராஜை திருச்சியில் உள்ள சுமேஷின் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்.


அங்கு சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததுடன், நிறுவனத்தையே காலி செய்துவிட்டு சுமேஷ் தலைமறைவானது தெரியவந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து மாரியப்பன் மற்றும் மாதவராஜ் திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


போலீசார் சுமேஷை தொடர்புகொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்த நிலையில், அவர் இரண்டு வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் காலை வருமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.ஆனால் மறுநாள் சுமேஷ் காவல் நிலையத்திற்கு வரவில்லை. அவரது செல்போனும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாரியப்பன், ரங்கராஜ்,மாதவராஜ் ஆகிய மூவரும்  காவல்துறை மேலதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.மூவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் புதூர் பகுதியைச்சேர்ந்ததாக இருந்ததால், வழக்கு புதூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.


இதையடுத்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கினை விசாரித்து மதுரையில் பதுங்கியிருந்த சுமேஷை சுற்றிவளைத்து கைது செய்தனர்.


போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், உக்ரைன்–ரஷ்யா போர் காரணமாக பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்றும், தானும் பல இடங்களில் பணத்தை இழந்துவிட்டதாகவும், சிறிது காலத்தில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும் சுமேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சுமேஷ்க்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் காவல்துறை பாதுகாப்புடன் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


பாதிக்கப்பட்ட மாரியப்பன் கூறுகையில் தங்களைப் போன்று பலரும் ஏமாந்து சிரமப்பட்டு வருவதாகவும், தங்களுடைய பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை கிடைப்பது மட்டுமின்றி, தங்களை போன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து  அவர்களுக்கும் பணம் கிடைப்பதற்கு தமிழக முதல்வரும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.