விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் கூலித்தொழிலாளி “துடி  துடி”த்து உயிரிழப்பு.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் - சுப்புலாபுரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் என்பவரின் மகன் கருப்பசாமி (45), இவர் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது, புதூர்,விளாத்திகுளம்,நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டைல்ஸ் ஓட்டும் கூலித்தொழில் செய்து வந்துள்ளார்.


இந்தநிலையில் வழக்கம்போல் சுப்புலாபுரம் கிராமத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, புதூர் நல்லமடம் அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த தனியார் கல்லூரி வாகனத்தின் மீது கருப்பசாமி ஓட்டி வந்த இருசக்கரவாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், கருப்பசாமி பலத்த காயம் அடைந்து “துடி  துடி”த்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனை அடுத்து கருப்பசாமியின் உடலை கைப்பற்றிய புதூர் காவல் நிலைய போலீசார் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கருப்பசாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து ஓட்டுனரான நாகலாபுரம் - கவுண்டன்பட்டி CSI கோவில் தெருவை சேர்ந்த தங்கமுத்து என்பவரின் மகன் தேவதாஸ் (63) , என்பவரிடம் புதூர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.