விளாத்திகுளம் அருகே “கபடி விளையாட்டில்” ஏற்பட்ட மோதல், கல்வீச்சு தாக்குதலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 20 -க்கும் மேற்பட்டோருக்கு காயம்!
40 பேர் மீது வழக்குப்பதிவு : வஜ்ரா வாகனம் மற்றும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பதற்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இலந்தைகுளம் மற்றும் இலக்கம்பட்டி இந்த கிராமம் இடையே அரசு பட்டா புறம்போக்கு இடம் உள்ளது, இந்த இடத்தில் இரு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் கபடி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர், இந்த இடத்திற்கு இரு கிராம மக்களும் சொந்தம் கொண்டாடி மாவட்ட ஆட்சியரிடம் “மாறி மாறி” மனு அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு அந்த ஊர் கிராம பொது இடத்தில்,லக்கம்பட்டி இளைஞர்கள் கபடி விளையாடிக்கொண்டிருந்தபோது, இலந்தைகுளம் கிராம இளைஞர்களுக்கும் லக்கம்பட்டி கிராம இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அது கைகலப்பாக மாறி அங்கு கிடந்த கற்களை எடுத்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர், இதனை அடுத்து பிரச்சினையை தடுத்து நிறுத்த சென்ற விளாத்திகுளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கோபால் உள்ளிட்ட 5 காவலர்கள் மீதும் இரு கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது, அதேபோல் இரு கிராம மக்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து காயம் அடைந்த இரு கிராம மக்கள் மற்றும் காவல்துறையினரை, விளாத்திகுளம் போலீசார் எட்டையாபுரம், கோவில்பட்டி,விளாத்திகுளம்,தூத்துக்குடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திருநாவுக்கரசு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஆகியோர் நேற்று இரவு இலந்தைகுளம் மற்றும் லக்கம்பட்டி கிராமங்களுக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
மேலும் இலந்தைகுளம் மற்றும் இலக்கம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த தலா 20 பேர்வீதம் 40 பேர் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் இலந்தைகுளம் மற்றும் லக்கம்பட்டி கிராமங்கள் முழுவதும் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனம், தீயணைப்புத் துறை வாகனம், போலீசாரின் விரைவுப்படை வாகனம் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலந்தைகுளம் - லக்கம்பட்டி கிராமம் இடையே அரசு நத்தம் புறம்போக்கு இடத்தினால் கடந்த 6 மாத காலமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை இருக்கும் என தெரிந்தும் இந்த பிரச்சனையை முறையாக செயல்படாத வருவாய்த்துறை அலட்சியம் காட்டியதால் தற்போது விளாத்திகுளம் பகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.