விளாத்திகுளத்தில் சிறையில் அடைக்க கொண்டு சென்ற விசாரணை கைதி போலீசாரிடமிருந்து தப்பி ஓட்டம்!


ஏற்கனவே கிளைச்சிறையில் இருந்து தப்பி ஓடியவர் மீண்டும் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடிய சம்பவத்தினால் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பு !




தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்த சந்திரசேகர்  என்பவரது மகன் நிரஞ்சன்(19). கடந்த பிப்ரவரி மாதம் 12ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்சினை தொடர்பாக விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து நிரஞ்சனை கைது செய்து கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்த நிலையில் மார்ச் 5-ந்தேதி தேதி இரவு கிளைச்சிறையின் சமையலறை பகுதி வழியாக மேலே ஏறி வெளியே குதித்து தப்பி ஓடினார். 

மறுநாள் 6-ந்தேதி காதலியை சந்திப்பதற்காக மீனாட்சிபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த நிரஞ்சனை போலீசார் கைது செய்து பேராவூரணி கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விளாத்திகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் ஜாமின் வெளிவந்த நிரஞ்சன் சரிவர ஆஜராக இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. 


இதையெடுத்து நேற்று விளாத்திகுளம் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த நிரஞ்சனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனை தொடர்ந்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதே தொடர்ந்து போலீசார்  நிரஞ்சனை கோவில்பட்டியில் உள்ள கிளைச்சிறையில் அடைக்க அழைத்துச் சென்றபோது, விளாத்திகுளம் -சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட சென்றபோது நிரஞ்சன் அங்கிருந்து நைசாக போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார். தற்போது போலீசார் தப்பி ஓடிய நிரஞ்சனை தேடி வருகின்றனர. இந்தச்சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.



ஏற்கனவே ஒருமுறை கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்து தப்பித்து போலீசார் நிரஞ்சனை கைது செய்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக போலீசாரிடம் இருந்து தப்பி உள்ளார். காவல்துறையினர் அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.