ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யும் தற்போதைய தமிழக அரசு!
விளாத்திகுளத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் மாபெரும் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!
1. மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பாதிப்பினைக் களைந்திடும் வகையில் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்.
2. தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் கடந்த அரசால் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதித் திட்டத்திற்கு (TAPS) ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11,000 கோடி மற்றும் ஏற்கனவே நடப்பில் உள்ள ஓய்வூதியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3,000 கோடி ஆக மொத்தம் ரூ.14,000 கோடி நிதிக்குறைப்பு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2,500 கோடி கடந்த ஆண்டைவிட குறைக்கப்பட்டுள்ளது. இந்நிதிக்குறைப்பினை சீர் செய்து முழுமையான நிதி ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டும். புதிய அரசு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தும் வரையிலும் TAPS திட்டத்திற்கான உரிய விதிமுறைகளை வெளியிட்டு முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்.
3. இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழுக்கள் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்பினைக் கருத்தில் கொண்டு அவர்களுடைய ஊதிய முரண்பாடுகளைக் களைந்து. 01.01.2006 முதல் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டுகிறோம்
4. தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I. தாள் II எழுதியுள்ள ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வழங்க வேண்டும். தேர்வு எழுதிய ஆசிரியர்களின் உயர்கல்வித் தகுதியினைக் கருத்தில் கொண்டு கூடுதல் கல்வித்தகுதிக்கும் கூடுதல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்திட வழங்க வேண்டும்.
5. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40% என நிர்ணயம் செய்திட வேண்டுமெனவும், இதில் பிற மாநிலங்களைக் கருத்தில் கொள்ளாமல் தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாக அரசாணை வெளியிட வேண்டுகிறோம்.
6. ஆசிரியர் பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டுள்ள 1,76,000 ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பினை வழங்கிடும் வகையில் பாராளுமன்றத்தில் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009ன் பிரிவு 23இல் திருத்தம் செய்திட மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுகிறோம்.
7. தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், குறிப்பாக பெண்ணாசிரியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பினைப் பாதிக்கும் வகையிலும், ஊட்டுப்பதவிகளில் மாற்றம் செய்து ஒரு இலட்சம் தொடக்கக்கல்வி ஆசியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பாதிக்கும் வகையிலும் கடந்த அரசு வெளியிட்டு நடைமுறைப்படுத்தியுள்ள அரசாணை எண் 243 பள்ளிக்கல்வித்துறை நாள் 21.12.2023-ஐ முற்றிலும் இரத்து செய்ய வேண்டுகிறோம். அறுபதாண்டுகால நடைமுறையான ஒன்றிய முன்னுரிமை என்பதை மீள நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்.
உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஒரு ஆசிரியர், தற்போது உள்ள தமிழக அரசு “ ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட்” செய்துள்ளார், ஊரான் வீடு என்றால் வேறு எதுவும் கிடையாது நமது வரிப்பணம் தான், கஜானா காலி என்பது இல்லை அது நிறைவாகத்தான் உள்ளது மனம் இருந்தால் ஆசிரியரின் கோரிக்கைகளை தாராளமாக நிறைவேற்றலாம்,தற்போது புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு 100 நாட்கள் ஆன நிலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,நேற்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டசபையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு கார் மற்றும் பராமரிப்பு செலவு 75 ஆயிரம், உதவியாளர் சம்பளம் 25 ஆயிரம் அறிவித்ததை சுட்டிக்காட்டி தங்களின் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டசெயலாளர் தலைமை ஜீவானந்தம் வகித்தார், கோவில்பட்டி கல்வி மாவட்ட தலைவர் ரவீந்திரராஜன் முன்னிலை வகித்தார், தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் சேர்மகனி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர், இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.