எட்டயபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை - மர்ம ஆசாமிகள் கைவரிசை!
நேற்று மூன்று வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு, மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு கொள்ளை சம்பவம் - அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேல ரத வீதியைச்சேர்ந்த அய்யாசாமியின் மகன் முத்துமாரி (50). இவரது மனைவி தேன்மொழி (46). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
முத்துமாரி, விளாத்திகுளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி தேன்மொழி, சொக்கலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ராமநாதபுரத்தில் வசித்து வரும் தனது மகளைப்பார்ப்பதற்காக முத்துமாரி மற்றும் அவரது மனைவி தேன்மொழி இருவரும் கடந்த 5-ம் தேதி சென்றுள்ளனர்.
இன்று ஊருக்குத்திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கும் காணாமல் போயிருந்தது. இதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முத்துமாரி எட்டயபுரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், ஏ.டி.எஸ்.பி. திபு மற்றும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்தைப்பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே வரை மோப்பநாய் சென்றது. இதற்கிடையில், தலைமை ஆசிரியர் முத்துமாரி வீட்டில் காணாமல் போன பைக், பிதப்புரம் பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பைக்கைக் கைப்பற்றி எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே நேற்று மூன்று வீடுகளில் மர்ம நபர் பூட்டை உடைத்ததுடன், மூதாட்டி ஒருவரைச்சித்திரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தலைமையாசிரியர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் எட்டயபுரம் பகுதி பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எட்டயபுரம் பகுதியில் பல்வேறு கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும், அவை முழுமையாகச் செயல்பாட்டில் இல்லை என்றும், காவல்துறையினரின் ரோந்துப் பணி மிகவும் குறைவாக இருப்பதுதான் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற முக்கியக்காரணமாக இருப்பதாகவும் எட்டயபுரம் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் எட்டயபுரம் பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே, மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதுடன், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க எட்டயபுரம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.