ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!




திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் திருநெல்வேலி பொதிகை நகரச் சேர்ந்த ஜஸ்டின்(56). அவரது மனைவி ஹீலியம் ஆகியோர் சென்னைக்குச் சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கரிசல்குளம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவருந்த பேருந்தை நிறுத்தி உள்ளனர். அப்போது ஜஸ்டின் மற்றும் அவரது மனைவி ஹீலியம் இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக தாங்கள் கொண்டு வந்த பேக்கினை தங்களது இருக்கையில் வைத்து விட்டு கீழே இறங்கி உள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் பேருந்துக்கு வந்தபோது அவர்கள் இருக்கையில் வைத்து சென்ற பேக் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


அந்த பேக்கில் 40 பவுன் தங்க நகை மற்றும் உடைகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 40 பவுன் தங்க நகை வைத்திருந்த பேக் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் மேலும் பேருந்தினை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சக பயணிகளிடம் சோதனை நடத்தினர். ஆனால் காணாமல் போனதாக கூறப்படும் பேக் கிடைக்கவில்லை. இதையெடுத்து பேருந்தினை விடுவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த ஆண்டு இந்த ஹோட்டலில் இதே போன்று நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்தில்  10லட்சம் பணம் திருடு போய், பின்னர் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். தற்போது மேலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.